பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிட மறுக்கும் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் காஞ்சிபுரம் வருகை தரும் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டியும், கோ பேக் ஸ்டாலின் வாசக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 


பரந்தூர் பசுமை விமான நிலையம் ( parandur airport )


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் - File Photo



பல்வேறு கட்ட போராட்டங்கள்


ஓர் ஆண்டாக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம், மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் போராட்டம், ஏரியில் இறங்கி போராட்டம், தினமும் இரவு நேரப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் கிராம மக்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி நடை பயண போராட்டமும் அறிவித்து, அரசு பேச்சு வார்த்தைக்கு பிறகு அதை கைவிட்டனர்.


இந்தநிலையில் சமீபத்தில் 400 ஆவது நாள் போராட்டம் நடைபெற்ற போது மெழுகுவர்த்தி ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர் . அதுபோக தினமும் இரவு வேலைகளில் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.


 



போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் - File Photo



 

"கோ - பேக் ஸ்டாலின்"

 

இந்நிலையில் தொடர்ந்து போராடிவரும் நிலையில் காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்ட துவக்க விழாவிற்கு வருகை புரியும் தமிழக முதல்வருக்கு தங்கள் நிலையை கவன ஈர்க்கும் வகையில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளைசத்திரம் பகுதியில் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பும், கோ பேக் ஸ்டாலின் எனும் வாசகத்தை பதாகைகளாக கையில் ஏந்தி, கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாக, இன்று நடைபெற்ற 13 கிராம போராட்ட குழுவினரின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் கூறுகையில், பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் தொடர்ந்து ஓர் ஆண்டு கடந்தும் தங்களை உதாசீனப்படுத்தும் மாநில அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் கருப்பு கொடி போராட்டமும் கோ பேக் ஸ்டாலின் என்ற வாசகத்தை முன்னிறுத்தி போராட உள்ளதாக தெரிவித்தார்.