சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இந்த ஆய்வை மேற்கொண்ட அவர், வட்டாட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்  சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் குறித்த விவரங்களை கேட்டதுடன், இதன்மீது வரும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



ஒரே இரவில் மாற்றப்பட்ட சென்னை ஆட்சியர்


இந்த நிலையில் நேற்றிரவு சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது. அந்த வகையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த விஜயராணி சென்னை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  2013 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரியான விஜயராணி  சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி நியமிக்கப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் புதிய ஆட்சியரை மாற்றப்பட்டுள்ளார். அவர் அடுத்து எங்கு மாற்றப்பட்டு இருக்கிறார் என்ற விபரமும் வெளியிடப்படவில்லை 



 


ஆட்சியர் மாற்றத்தின் பின்னணி 


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரிலேயே சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி மாற்றப்பட்டுள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்த போது பொதுமக்கள் பல்வேறு குறைகள் தெரிவித்த நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.   


மேலும்  செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - Keezhadi Excavation: ‛உருக்காலை மூலம் தயாரான இரும்பு பொருட்கள்’ கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்!