தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியானது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.


முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி:


இதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திடீர்  மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மகன் சஞ்சய் சம்பத் , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் இருந்தனர். 


இடைத்தேர்தல்:


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமானதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இந்நிலையில் இந்த தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், இன்னும் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 






ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் கமிட்டி விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், தனது வயது மூப்பு மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது இளைய மகன் சஞ்சய் போட்டியிடட்டும் என தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை தனது மகனுக்கு விட்டு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் தேர்வை தேசிய தலைமையின் ஒப்புதலுக்காக காங்கிரஸ் தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.