சென்னை மாமல்லபுரத்தில்
மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
விடுமுறை
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நேற்று தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். போட்டியை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செய்தியாளர்களை, சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில், 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்