சென்னை மாநகரம் தனது முழு வளர்ச்சியை எட்டி உள்ளது. சென்னையை நம்பி பல லட்சக்கணக்கான, மக்கள் இருந்து வருகின்றனர். சென்னையை போன்று சென்னை புறநகர் பகுதிகளும், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இதனால் சென்னைக்கு அருகிலேயே துணை நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது அத்தியாவசியமாகிறது.
தமிழக அரசு கையில் எடுத்த புதிய திட்டம்
இதற்காக, தமிழ்நாடு அரசு, குறிப்பாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக, புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்காக, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில், குடிநீர் ஏடிஎம்-களை நிறுவ சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை குடிநீர் ஏடிஎம்-கள் (Chennai Water ATM)
சென்னையில் முக்கிய இடங்களில் குடிநீர் ஏடிஎம் திறக்கப்பட உள்ளன. குடிநீர் ஏடிஎம்-கள், சென்னை கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், மார்கெட் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட் பகுதி, சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளிட்ட 40 இடங்களில் குடிநீர் ஏடிஎம்-களை நிறுவுவதற்கான பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், க்யூ.ஆர் முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பெற முடியும்.
குறைந்த விலையில் குடிநீர்
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள குடிநீர் ஏடிஎம்-களில், 2 அளவுகளில், அதாவது, குறைந்தபட்சம் 150 மில்லி லிட்டரும், அதிகபட்சமாக 1 லிட்டர் தண்ணீரையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்று, குடிநீர் ஏடிஎம்-ல் கட்டணம் செலுத்தி, சுத்தமான குடிநீரை மக்கள் நிரப்பிக் கொள்ளலாம்.
திறக்கப்படும் குடிநீர் ஏ.டி.எம்-கள்
இந்தநிலையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 50 குடிநீர் ஏ.டி.எம்.களை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட 50 இடங்களில் முதற்கட்டமாக இன்று செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த குடிநீர் ஏடிஎம்களில் இலவசமாக நீரையும் பெற முடியும்.