Valluvar Kottam Flyover: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு பதிலாக, சாலை விரிவாக்க பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் நிறுத்தி வைப்பு:
சென்னையின் பரபரப்பான சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக வள்ளுவர் கோட்டம் பகுதி நிலவுகிறது. இந்த நான்கு முனை சந்திப்பானது விமான நிலையம், வணிக பகுதியான தியாகராய நகர் மற்றும் சென்னை செண்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கான பயண வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, இந்த பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாக நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம் அமைக்க சென்னை மாந்காராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில் தற்போது பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்:
அதேநேரம், நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் சாலையை விரிவுபடுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம்செலுத்த தொடங்கியுள்ளது. திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு இறுதிக்குள் அது முடிவடையும் என மாநகராட்சி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டம்:
சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் உள்ளிட்டவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோடம்பாக்கம்நெடுஞ்சாலையானது தற்போது ஒற்றைவழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஜெமினி சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையை தி.நகர். கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளை அடைவதற்காக இரட்டை வழி சாலையாக பயன்படுத்துகின்றன. இந்த சூழலில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடும் நெரிசலை ஏற்படுத்துகின்றன. சாலை விரிவாக்க பணிகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மற்றும் நேரம் எடுத்துக்கொள்ளும் என்றாலுமே, நீண்டகாலத்தை கருத்தில் கொண்டால் அது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.
ரூ.200 கோடி பட்ஜெட் மேம்பாலம்:
570 மீட்டர் நீளத்திற்கான நான்கு வழி மேம்பாலமானது கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த மேம்பாலமானது பால்ம்க்ரோவ் ஓட்டலில் தொடங்கி கோடம்பாக்கம் பாட்டர்ஸ் வரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், 2000 சதுர மீட்டர் அளவிலான தனியார் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் இந்த பணிகள் தாமதமடைந்தன. நிலம் கையகப்படுத்துதல் உட்பட, இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 200 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுவடிவில் வள்ளுவர் கோட்டம் மேம்பாலம்:
தாமதமானது வள்ளுவர் கோட்ட மேம்பாலத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பிற்கு உதவும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், வள்ளுவர் கோட்டம் மேம்பாலத்தை பார்க் ஓட்டல் சந்திப்பு வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன் மையத்தில் ரவுண்டானாவை அமைக்கவும் ஆலோசித்து வருகிறது. அப்படி செய்தால் நான்குமுனை சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைப்பதோடு, பார்க் ஓட்டல் சந்திப்பிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலான பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மற்றொரு மேம்பாலமும் தேவைப்படாது என அரசு தரப்பு பரிசீலித்து வருகிறதாம். அப்படி நடந்தால், சென்னையின் பிரதான பகுதியான வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பல்வேறு பகுதிகளுக்கான இணைப்பு பாதையை அடைவதும் எளிதாகும்.