சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருவதால் முக்கிய சாலைகள் பலவற்றிலும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.


இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் இன்று முதல் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள ஈ.வெ.ரா. சாலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோயம்பேடு – அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும்.




அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் அண்ணாவளைவில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம். அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை மூலமாக அமைந்தகரை செல்லலாம். அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் எந்த போக்குவரத்து தடையுமின்றி செல்லலாம்.


ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை போல, 100 அடி சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வடபழனி சந்திப்பில் இருந்து அசோக் பில்லர் வரை இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 அடி சாலை 2வது நிழற்சாலை சந்திப்பில் இருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அசோக் பில்லர் வழியாக வடபழனி, கோயம்பேடு, கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.




அசோக் பில்லர் வழியாக தி.நகர், கோடம்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம். வடபழனியில் இருந்து 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் செல்லலாம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நடைமுறையால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்லலாம் என்று கருதப்படுகிறது.


சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோநகர் வரை கிண்டி மார்க்கம் வழியாகவும், விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை கோயம்பேடு மார்க்கம் வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதர பகுதிகளிலும் மெட்ரோ ரயில் இயக்குவதற்காக கட்டுமான பணிகள் வளசரவாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண