சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் விமானம் சென்னையில் இருந்து புறப்பட தயாரானது.
இந்த விமானத்தில் 98 பயணிகள், விமானிகள், விமான சிப்பந்திகள் உள்பட 104 பேர் பயணத்திற்கு தயாராக இருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் புறப்பட தயாராகி ஓடுபாதையில் இயக்கப்பட்டது. அப்போது, விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். மேலும், விமானத்தை ஓடுபாதையிலே நிறுத்தினார்.
இழுவை வாகனம் மூலமாக விமான நிலையத்திற்கு இழுத்து வரப்பட்ட அந்த விமானம் பின்னர் நடைமேடையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு பயணிகள் தங்கும் அறையில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், எந்திரக்கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்தில் முடிவடையும் என்று கூறப்பட்ட பழுதுபார்க்கும் பணி முடிவடையாததால் அதிகாலை 4 மணிக்கு விமானம் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர். ஆனால், 4 மணிக்கும் எந்திரக்கோளாறு சரிபார்க்கும் பணி நிறைவு பெறாததால் பயணிகள் கோபமடைந்தனர். அவர்கள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு அறையில் காத்திருந்த பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. சில பயணிகள் வெளியில் சென்று வந்த நிலையில், பல பயணிகள் ஓய்வு அறைகளிலே மிகவும் சிரமத்துடன் காத்திருந்தனர். பின்னர், விமானத்தின் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் 13 மணி நேரத்திற்கு பிறகு நேற்று காலை 11.30 மணிக்குதான் விமானம் புறப்பட்டுச் சென்றது.
13 மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆனதால் பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயத்தில், சரியான நேரத்தில் விமானி எந்திரக்கோளாறை பார்த்து விமானத்தை நிறுத்தியதால் 104 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்