9 லட்சம் பேர் பயணம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித் தடங்களில், தினமும் 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 9 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி நடக்க உள்ளதாக கூறி, கடந்த 2024ம் ஆண்டில் , சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில், 50 மின்சார ரயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், வழக்கமாகச் செல்லும் ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் கூட்டம் அலை மோதுகிறது. இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடப்பதால், கடற்கரை - தாம்பரம் தடத்தில், இரவு நேர ரயில்களான, இரவு 8:55, 10:20, 11:30 மணி ரயில்களின் சேவை, வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போல், வரும் 15 - ம் தேதியான, ஞாயிற்றுக் கிழமை ஆறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், கூட்ட நெரிசலில் பயணியர் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது ;
சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில், பயணியர் நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பராமரிப்பு பணியை காரணம் காட்டி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில் நிறுத்தப்பட்ட 50 - க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை மீண்டும் துவக்கப்படவில்லை.
தற்போது கடற்கரை - தாம்பரம் தடத்தில், மூன்று இரவு நேர ரயில்கள், வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், மாற்று ஏற்பாடு குறித்து எந்த விபரமும் வெளியிடப் படவில்லை. கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்குவது குறித்து, எந்த தகவலும் இல்லை. அல்லது மின்சார பாஸ்ட் ரயில்கள் இயக்கினாலும், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.
