சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (29). இவர் அதே பகுதியில் கடந்த 10 வருடங்களாக சொந்தமாக ஜெராக்ஸ் மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கடையை மூடி விட்டு காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 15 ரூபாய் மதிப்புள்ள பிரிண்டர் மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சௌந்தர பாண்டியன் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடைய ஒருவனின் புகைப்படம் தென்பட்டது. இதனை மையமாக வைத்து கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) மணலி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (23) கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் (19) ஆகிய 3 நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடுபோன பிரிண்டர் மற்றும் மானிட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் - பொதுமக்கள் கடும் அவதி
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீரென்று சாலையில் ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். பட்டாளம் வழியாக செல்லும் வாகனங்கள் ஓட்டேரி மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டன. புரசைவாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் தானா தெரு வழியாகவும், சூளை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த 6 ஆவது மண்டலம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பள்ளம் விழுந்த பகுதியில் 1200 மில்லி மீட்டர் அளவு கொண்ட கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அது வெடித்து அதன் அருகே இருந்த மண் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு ராட்சத பள்ளம் விழுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். எப்போதும் , வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களும் , பொதுமக்களும் சென்று கொண்டு இருக்கும் இப்பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.