சென்னையில் புறநகர் ரயிலின் தாமதத்தால் பயணிகள் வந்தே பாரத் ரயிலை பிடிக்க தண்டவாளத்திலேயே நடந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பேசின்பிரிட்ஜ்–சென்னை சென்ட்ரல் புறநகர் பாதையில், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்கள் 30-40 நிமிட தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதன் காரணமாக, சென்னை புறநகர் நிலையத்தின் மூன்று பிளாட்பார்ம்கள் காலியாக நிறுத்தப்பட்ட ரேக்குகளுக்காக பயன்படுத்தப்பட்டதுதான் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை–கூடுர் மார்க்கத்தில் ரயில் சேவைகள், காவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ரத்து செய்யப்பட்டதால், அந்த ரேக்குகள் பிளாட்பார்ம்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் சென்னை–ஆரக்கோணம் பாதையில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நேற்று(14.08.25) பிற்பகல் 1.45 மணிக்கு, அரக்கோணம்-சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் பேசின்பிரிட்ஜ் வந்தது. 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு அருகில் வந்து, சிக்னல் காத்துக் கொண்டே நின்றது. ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாக வந்திருந்த ரயில், 2.20 மணி வரை அங்கு நின்றது.
இந்நிலையில், 2.05 மணியளவில் சுமார் 50 பயணிகள், வந்தே பாரத் ரயிலை பிடிக்க அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி, ரயொஇல் பாதையில் ஓடி சென்ட்ரல் நிலையத்தை அடைந்தனர். அந்த வந்தே பாரத் ரயில் 2.15 மணிக்கு புறப்பட இருந்தது. பெரும்பாலானவர்கள் ஆவடி, பெரம்பூர் இடையே புறநகர் ரயிலில் ஏறி திருப்பூர், கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆவடி சேர்ந்த 45 வயது பயணி ஒருவர், “ரயில் ஆவடியில் ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாக வந்தது. 1.50 மணிக்குள் வந்திருந்தால், 2.05 மணிக்கு வந்தே பாரத்தில் ஏறியிருப்பேன். ஆனால் 20 நிமிடம் நிலையத்திற்கு வெளியே நின்றதால் பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார்.
மற்றொரு பயணி,அதிக லக்கேஜ் வைத்து இருந்ததால் ரயில் பாதையில் நடக்க முடியாமல், வந்தே பாரத்தை தவறவிட்டார். அவர், “புறநகர் ரயில்கள் இப்போது இணைப்பு ரயில்களை சரியான நேரத்தில் பிடிக்க முடியாமல்” என்று கூறினார்.
ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் நோக்கி செல்லும் ரயில்களை வந்து செல்ல வெறும் இரண்டு பிளாட்பார்ம்களே இருந்தன. ரேக்குகளை யார்டில் வைக்காமல் பிளாட்பார்ம்களில் வைத்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர், மேலும் இது குறித்து தெற்கு ரயில்வேயில் இருந்து எந்த அதிகார்வப்பூரவ தகவலும் வெளியிடப்படவில்லை.