தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று கிட்டத்தட்ட 14 நாட்கள் இரவு, பகலாக போராடி வந்தனர் சென்னையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள். அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, மேயர், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் கைவிடவில்லை.
இறுதியாக அனுமதியின்றி போராட்டம் நடத்துவதையும், பாதயை அடைத்து உட்கார்ந்திருபப்தையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் சொன்ன பிறகு இரவோடு, இரவாக தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முக்கியத்துவம்
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக,
- தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்
- பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- தூய்மைப் பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
- கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை ஏற்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அரசு தரப்பு அவர்களை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் பேட்டி அளித்திருக்கிறார்.
உண்மையில் என்னதான் பிரச்னை..?
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம். அதில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் 2020ஆம் ஆண்டு முதல் குப்பை மேலாண்மையானது தனியார்மயப்படுத்தப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் இது ஒன்றும் புதிதல்ல என்றும் தெரிவித்தனர். அப்படியிருக்கையில், இப்போது மேலும் இரண்டு மண்டலங்களுக்கு இதனை விரிவாக்கம் செய்தபோதுமட்டும் ஏன் இப்படியான பிரச்னை ஏற்பட்டது? என்று கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர்கள், ’தூய்மை பணியாளர்களின் ஒரே கோரிக்கை என்னவென்றால், ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த ஊதியம் அப்படியே கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது அவர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ போன்ற பிடித்தங்கள் செய்யப்படுகின்றன. அதனால், 3000 ரூபாய் குறைவாக கிடைக்கும், ஆனால் அவர்களது வங்கிக் கணக்கில் சேமிப்பில் தான் இருக்கும். இதை புரிந்துக்கொள்ள முடியாத தூய்மை பணியாளர்கள் ஊதியம் குறைப்பட்டுவிட்டதாக பேசி வருகின்றனர் என்றனர்.
மாநகராட்சி ஊழியர்களை தனியார் ஊழியர்களாக மாற்றுவதாக சொல்லப்படுகிறதே ? அதுவும் உண்மை இல்லையா ? என்ற கேள்விக்கும் பதிலளித்த அதிகாரிகள் தரப்பு. ‘இது முற்றிலும் தவறான தகவல் என்றும், 2013ஆம் ஆண்டு முதலே தூய்மை பணியாளர்கள் யாரும் புதிதாக நியமிக்கப்படவில்லை. சுய உதவிக் குழுக்களின் மூலமாக, பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களும் அல்ல. சுய உதவிக்குழுவின் ஒப்பந்த ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றப்படுகிறார்கள் அவ்வளவுதான். இவர்கள் சென்னை மாநகராட்சியின் ஊழியர்களாக எப்போதும் இருந்தது இல்லை. மாநகராட்சி ஊழியர்களை தனியார் நிறுவனத்திற்கு போகச் சொல்கிறார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றனர்.
இதில், புரிதலற்ற தூய்மை பணியாளர்களை சிலர் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த செய்திருக்கிறார்கள் என்றும் அதில் அவர்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்பட்டுள்ளதே தவிர தூண்டிவிட்டவர்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள் ஆதங்கத்தில்.
என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது..!