அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று வரும் வகையில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு விருப்ப மனுக்களை வழங்கும் நிகழ்வு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த உட்கட்சித் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி ஆகியோரை பொறுப்பாளர்களாக அதிமுக தலைமை நியமித்தது இருந்தது. 



 

இதில் சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்து வரும் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு தனது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.  ஒருமனதாக மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்ந்தெடுப்படுவார் என நிர்வாகிகள் எண்ணிய நிலையில், அப்பொழுது முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன்,  மாநில மாணவரணி துணை செயலாளரும், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் ஆகியோர், மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக தங்களது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்கள். இதை பார்த்த மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆதரவாளர்கள் விருப்ப மனுவை அளித்த கோவிலம்பாக்கம் மணிமாறனிடம் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளித்த மணிமாறனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தாக்க முயன்றதால், இருதரப்பினர்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சலசலப்பு காணப்பட்டு கைகலப்பாக மாறும் சூழலால் பரபரப்பு காணப்பட்டது.


 



 

அங்கிருந்த தேர்தல் பொறுப்பாளர்கள் இருதரப்பினருக்கு இடையே நடைபெறவிருந்த கோஷ்டி மோதலை தடுத்து நிறுத்தினர். இது சம்பந்தமாக நிர்வாகிகள் சிலர் கூறும்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த கே.பி.கந்தன் அவருடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதால், சென்னை புறநகர் பகுதி மாவட்டத்தில் பெரும் அதிருப்தி இருந்து வந்தது. அதை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளையும் அவருடைய ஆதரவாளர்களுக்கு வழங்கி வந்ததாகவும், கழகத்திற்காக பல ஆண்டுகள் உழைத்த முன்னோடிகள் கே.பி.கநந்தனால் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். 



 

கட்சி தேர்தல் எப்பொழுது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கே.பி.கந்தன் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக தான் மாவட்ட செயலாளர் பதிவுக்கு போட்டியிட இருவர் தங்களது விருப்ப மனுவை தாக்கள் செய்தாகவும் கூறினர். தொடர்ந்து கே.பி.கந்தன் மீது சென்னை புறநகர் பகுதி மாவட்டத்தில் அதிருப்தி இருந்து வந்த நிலையில், மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்தெடுத்தால் அதிமுகவில் பிளவு ஏற்படவும், ஏற்கனவே சிலர் அதிமுகவில் இருந்து மாற்று கட்சிக்கு சென்ற நிலையில் தொடர்ந்து அதிமுகவினர் மாற்று கட்சிக்கு செல்லக்கூடிய நிகழ்வுகளும் நிகழும் எனவும் அப்பகுதி அதிமுகவினர் பேசிக்கொள்கின்றனர். இந்நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளராக கேபி கந்தன் தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.