சென்னையில் நடுரோட்டில் நடந்து சென்ற சிறுமியை மாடு முட்ட வந்த நிலையில், அந்த சிறுமியின் தாயார் தனது மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், சிறுமியின் தாயாரை அந்த மாடு முட்டி தூக்கி போட்டது. இதையடுத்து, அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மகளை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த பெண்:
சென்னையில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்தை சந்திப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், கொரட்டூரில் மாடு மோதியதால் பெண் ஒரு பலத்த காயம் அடைந்துள்ளார். பெண்ணை மாடு முட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் பெண் ஒருவரும் அவரது மகளும் நடந்து சென்றுள்ளனர். அப்போது, மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. சிறுமியை பார்த்த உடன் அந்த மாடு முட்ட வந்துள்ளது. ஆனால், தனது மகளை சாலையின் மறுபுறம் இழுத்து அந்த பெண் அழைத்து சென்றுள்ளார்.
இருப்பினும், பெண்ணின் பின்புறம் சென்ற அந்த மாடு சாலையின் ஓரத்தில் உள்ள சுவற்றில் தள்ளி முட்டி மோதியுள்ளது. பெண் கீழே தள்ளி தொடர்ந்து முட்டியது. இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் வந்து மாட்டினை குச்சியால் அடித்து விரட்டியுள்ளனர்.
பரபரப்பு காட்சி:
தற்போது, அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை உள்ளிட்ட பொதுஇடங்களில் கால்நடைகள் நடமாடினால் கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பல முறை எச்சரித்துள்ளது.
ஆனாலும், சில உரிமயாளர்கள் அஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதால் இதுபோன்ற விபத்துகள் தொடர்கிறது. அண்மையில் சென்னையில் கூட ஒரு சிறுமி, மாடு முட்டி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.