சென்னை மக்கள் வெளியூர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்டு வந்த தென் மாவட்ட பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ஒசூர், பெங்களூரு மற்றும் ஈசிஆர் வழியாக செல்லும் விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

கிளாம்பாக்கம்: 

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்துமே கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பி செல்கிறது. அம்பத்தூர், மாதவரம், ஆவடி, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் பயணித்து கிளாம்பாக்கத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது. 

Continues below advertisement

இதன் காரணமாக 6 மணிக்கு பேருந்து என்றால் 3 மணிக்கெல்லாம் இந்த பகுதிகளில் இருந்து கிளம்பினால் தான் கிளாம்பாக்கத்தை அடைந்து பதற்றமின்றி பேருந்துகளை அடைய முடியும். 

வடசென்னையில் இருந்து பேருந்துகள்: 

இதனை கருத்தில் கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆவடி மற்றும் திருவொற்றியூரில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, திருநெல்வெலி ஆகிய ஊர்களுக்கு தினமும் அரசு விரைவுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த பேருந்துகளுக்கு ஆன்லைன் மற்றும் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகளும் உள்ளது. 

பயணிகள் கோரிக்கை: 

இதில் ஆவடியில் கிளம்பும் பேருந்துகளுக்கு அம்பத்தூர், போரூர் டோல்கேட், தாம்பரம் ஆகிய இடங்களில் போர்டிங் பாயிண்ட் வசதி உள்ளது. ஆனால் திருவொற்றியூரில் இருந்து கிளம்பும் திருச்செந்தூர், நாகர்கோவில் பேருந்து முறையான போர்டிங் பாயிண்ட் வசதி இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். 

இதில் நாகர்கோவில் செல்லும் பேருந்து ராயபுரம், சென்ட்ரல், அண்ணாசாலை, கிண்டி வழியாக செல்கிறது, ஆனால் அந்த பேருந்துக்கு திருவொற்றியூருக்கு அடுத்தப்படியாக தாம்பரம் தான் அடுத்த போர்டிங் பாயிண்ட்டாக உள்ளது. 

திருச்செந்தூர் செல்லும் பேருந்து மாதவரம், அம்பத்தூர் புறவழிச்சாலை, மதுரவாயல் வழியாக கிளாம்பாக்கம் செல்கிறது, ஆனால் திருவொற்றியூருக்கு அடுத்ததாக கிளாம்பாக்கம் தான் போர்டிங் பாயிண்ட் வசதி உள்ளது. 

இதனால் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது, திருச்செந்தூர் செல்லும் பேருந்துக்கு மாதவரம் பேருந்து நிலையம், அம்பத்தூர் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச், போரூர் டோல்கேட் போன்ற இடங்களில் போர்டிங் பாயிண்ட் வசதி செய்து தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதே போல ஈசிஆர் மார்க்கமாக வேளாங்கண்ணி செல்லும் விரைவு பேருந்துக்கும் ராயபுரம், சென்னை கடற்கரை பகுதிகளில் போர்டிங் பாயிண்ட்கள் ஏற்ப்படுத்தி தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.