காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தைச் சேர்ந்த கிராமங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விலை நிலங்களுடன் குடியிருப்புகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து ஏகனாபுரம் மக்கள் தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று 59 வது நாளக ஏகனாபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
பள்ளிகள் புறக்கணிப்பு
ஏகனாபுரம், நெல்வாய், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிராமங்களில் பள்ளிகளுக்கு தங்களுடைய மகன் மற்றும் மகள்களை அனுப்பப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து போராட்டக் குழுவினர் நம்மிடம் தெரிவிக்கையில், விமான நிலையம் அமைப்பதற்கு தொடர்பாக முதலில் அறிக்கை வந்த பொழுதிலிருந்து தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். தற்போது விமான நிலையம் அமைவதற்கு அனைத்து விதமான சாத்திய கூறுகள் உள்ளதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், எங்களுடைய போராட்டம் ஆனது 50 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் , ஈடுபட்டு வருகிறோம். எங்களுடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக இன்று மட்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், காலாண்டு தேர்வு உள்ளிட்டவற்றை புறக்கணித்து நாங்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர்.
1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!
விமான நிலையம் எங்கு அமைய போகிறது என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்து வந்த பாதையை கொஞ்சம் டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.
1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.
1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்
1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை ஆணையம் , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர்.
1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில் 3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல் வெளியானது.
2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .
2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம் நிலையம் அமைக்க முடிவு செய்தார்.
2012 மார்ச் மாதம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு திட்டம் தீட்டியது.
2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில் 4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.
2022 மார்ச் மாதம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.