உலகின் 2வது மிக நீளமான கடற்கரை மெரினா. வார நாட்கள்.. வார இறுதி நாட்கள் .. காலை.. மாலை என எல்லா நேரமும் கூட்டம் அலைமோதும் ஒரு இடம். கடல் பார்த்து.. கடலில் கால் நனைத்து.. கால்களில் ஒட்டிக் கொண்ட மணலுடன் வீட்டிற்கு திரும்பும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. எந்த கவலை உள்ளுக்குள் இருந்தாலும் சற்று நேரம் கடலின் பிரம்மாண்டத்தை பார்த்து நின்றால் கடல் காற்றின் உப்பில் எல்லா சோகமும் கரைந்துபோகும். ஆனால் இவையெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான்.


மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாய்ப்புகள் எல்லாம் இல்லை. சக்கர நாற்காலியை கடல்வரை மணலில் தள்ளிக் கொண்டு போவது இயலாத காரியம்... அவர்கள் கடற்கரை சாலையிலேயே சற்று நேரம் இளைப்பாறிவிட்டு வீடு திரும்பும் நிலைதான் நிலவுகிறது. கடல் பார்ப்பது மாற்றித்திறனாளிகளுக்கு கனவாகத்தான் இருக்கிறது.  ஒரு சில பண்டிகை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிக நடைபாதையை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும். பின்னர் அது எடுக்கப்பட்டுவிடும்.




அப்படியான ஒரு தற்காலிக நடைபாதைதான் தற்போதும் மெரீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. சொந்த வீல் சேர்களிலோ  அல்லது மாநகராட்சியின் வீல் சேர்களிலோ மாற்றுத்திறனாளிகள் செல்லும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இது ஒரு வாரத்துக்குதான் இருக்கும் என்றும் கூறபப்டடுள்ளது. ஒரு வாரம் முடிந்ததும் மறுபடியும் மீண்டும் எப்போது நடைபாதை போடுவார்கள் என மாற்றுத்திறனாளிகள் ஏங்கி காத்திருக்க வேண்டிய சூழல்தான்.


இந்நிலையில் மற்றவர்களுக்கு எப்படி எப்போது தோன்றினாலும் சென்று கடல் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறதோ அதே வாய்ப்பை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அந்த வாய்ப்பை வழங்கும் பொறுப்பு அரசுக்கும் உள்ளது,   மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதையை கடற்கரையில் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மெரீனாவில் மட்டுமல்லாது பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் நிரந்தர நடைபாதைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கைகளும்  எழுந்துள்ளன. 






`ஊனமுற்றோர்' என்ற வார்த்தையை `மாற்றுத்திறனாளிகள்' என்று சட்டபூர்வமாக மாற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடுகள், உதவித்தொகைகள்  வழங்கும் திட்டங்களையும் கொண்டுவந்து வெறும் பெயரளவிற்கு வார்த்தைகளில் மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.




அப்படிப்பட்டவரின் மகனான ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்த நடைபாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. கடல் பார்ப்பது ஒரு சின்ன விஷயமாக தோன்றலாம். ஆனால் வாழ்வென்பது எல்லா சின்ன சின்ன விஷயங்கள் சேர்ந்ததுதானே...!