வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நாளை அதிகனமழைக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுககப்பட்டுள்ளது.



அத்தியாவசிய பொருட்கள் விற்பனை:


ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  சென்னையில் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கடந்த கால மோசமான அனுபவத்தின் காரணமாக பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும், நாளை அதிகனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்ததால் நேற்று முதலே கடைகளில் பால், காய்கறிகள், முட்டை போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். மேலும் ப்ரெட், பழங்கள் போன்றவற்றையும் பலரும் வாங்கி வருகின்றனர். 

கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலங்கள்:


மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளங்களில் பலரும் தங்களது கார்களை பறிகொடுத்தனர். இதனால், இந்த முறை முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை அந்தந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்றே நிறுத்தத் தொடங்கினர்.


மேலும், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை மேல்மட்ட தளங்களுக்கே கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். மேலும், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளதால் பலரும் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது வரை சென்னையில் பெரியளவு எந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசலோ, சுரங்கப்பாதை மூடப்படவோ இல்லை என்பதால் தற்போது வரை பெரியளவு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல உள்ளது.

சீரான மின்விநியோகம்:


அதேபோல, மழை விட்டு விட்டுப் பெய்து வரும் சூழலில் சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் சென்னையில் பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் தற்போது வரை எங்கும் மின்தடை இல்லாததால் மின் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.


பொதுமக்கள் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகளை வாங்கிக் குவித்துள்ளதால் சில இடங்களில் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் நாளை இரவுக்குள் 20 செ.மீட்டமர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.