இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றாகவும் திகழ்வது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகும். தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல சவாலான அறுவை சிகிச்சைகளை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையால் செய்யப்பட்டு வருகிறது.
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை:
சவாலான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் அரசு மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. எலும்பு மஜ்ஜை சிகிச்சையானது தானமாக வழங்கும் நன்கொடையாளர்களின் இடுப்பு எலும்பில் இருந்து மஜ்ஜை எடுக்கப்படுகிறது.
அவ்வாறு தானம் தரும் நன்கொடையாளர்களை பாராட்டும் விதமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று உலக மஜ்ஜை கொடையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் எலும்பு மஜ்ஜை தானமாக வழங்கிய நன்கொடையாளர்கள், பயன் பெற்ற பயனாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்த சிகிச்சையால் பயனடைந்த குழந்தைகளும் பங்கு பெற்றனர்.
165 அறுவை சிகிச்சைகள்:
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் மருத்துவர் சாந்தாராமன்,எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் அருணா ராஜேந்திரன் ஆகியோர் வெற்றிகரமாக சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டினார். பின்னர், எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை குறித்தும் அங்கிருந்தவர்களிடம் சிறப்புரை ஆற்றினார். இந்த சிகிச்சை மூலமாக ரத்த கோளாறுகள், லுக்கேமியா, லிம்போமா போன்ற ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 165 எலும்பு மஜ்ஜை மாற்று வெற்றிகரமாக சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 89 குழந்தைகளுக்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பல்வேறு சவாலான அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.