தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் பரவலாக மழை பதிவானது. நண்பகல் நேரத்தில் சூரியன் வானத்தில் இருந்து மின்னிய நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியது.


அசோக் நகர், கே.கே.நகர். மேற்கு மாம்பலம், தி.நகர், கிண்டி, ஆயிரம் விளக்கு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. 


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்து. மேலும், வரும் சனிக்கிழமை வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது அனைவருக்கும் இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 






சென்னையும் ஒரு நாள் மழையும்:


மழை என்றதுமே மனதில் எவ்வளவு உடைந்திருந்தாலும் துள்ளிக் குதிக்க செய்துவிடும். சொன்னதற்கே இப்படி என்றால், வானம் கொண்டாட்டத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும். சென்னையின் மீது தீரா காதல் கொண்டோருக்கும் சற்று யோசிப்பது என்றால், ஒரு மணி நேர மழைக்கு சென்னையே தலைக்கீழாக மாறிவிடுமே என்ற வருத்தம் என்பதுதான்.






ஆம். இன்று அப்படியே! மழை பெய்ய தொடங்கி ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கிவிட்டது. கொஞ்சம் நேரம் பெய்த மழைக்கே கணுக்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கினால் எப்படி? மழை என்னாதான் கொண்டாட்டத்தை வழங்கினாலும், அதோடு பல்வேறு சிக்கல்களை சேர்ந்தே கொடுக்கிறது. சென்னையில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் நீர் தேங்கியதால், சாலைகளில் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் ரயில் நிலையங்கள், சாலைகளின் இருபுறமும் நீர் தேங்கியது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. 






சென்னையின் மழை காலத்தை மக்கள் சமாளிக்க பழகிக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். டிவிட்டரில் சென்னைரெயின்ஸ் என்று மழை குறித்து பல்வேறூ வீடியோக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் கொஞ்சம் நேரம் பெய்த மழைக்கே வாகனங்கள் நீரில் மிதந்து சென்றனர் என்று கூறியுள்ளனர். 


சென்னை மக்கள் மழையை கொண்டாடி வருகின்றனர். அதோடு #afterrains #Chennairains #Chennairain உள்ளிட்ட ஹாஷ்டேக் பயன்படுத்தி மழை புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துவருகின்றனர்.