சென்னை பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒக்கியம், துரைப்பாக்கம், தரமணி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
அதே போல், தாம்பரம் குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பெரும்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாக வண்டலூர், கிண்டி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர், மாம்பல, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் இது வெறும் ட்ரெய்லர் தான் இனிமேல் தான் மழையின் ஆட்டம் இருக்கும் என்றும் வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை மழை வெளுத்து வாங்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் அவர் பதிவிட்ட பதிவில், கடந்த நாட்களில் தமிழ்நாட்டில் பெய்த மழையை விட 11-14 ஆம் தேதி கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னையில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 9 முதல் 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 11ஆம் தேதி 15 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் எனவும் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.