சென்னையில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் நேற்று மழை பெய்ததால் துபாய், பக்ரைன், ஹாங்காங், மும்பை, லக்னோ ஆகிய இடங்களிலிருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல்,பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்கள் இயங்க தாமதமானதாக் பயணிகள் கடும் அவதிகுள்ளாகினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து, சூறைக்காற்றுடன், இடி மின்னல்,பலத்த மழை கொட்டியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.186 பயணிகளுடன் துபாயிலிருந்து சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் இருந்து பக்ரையினிலிருந்து 167 பயணிகளுடன் சென்னை வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 204 பயணிகளுடன் வந்த கேத்தே பசிபிக் விமானம் மற்றும் மும்பை, லக்னோ விலிருந்து வந்த 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் மதுரை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, திருச்சி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு தாமதமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
இதை போல் சென்னையில் இருந்து துபாய், பக்ரைன், திருச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டது. இதையடுத்து இதுவரையில் சென்னையில் 20 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கொட்டிதீர்த்த கனமழை :
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை நேற்று பெய்தது. அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசண்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
அதேபோல், சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னை வானிலை மையம் அறிக்கை :
தமிழ்நாடு மற்றும் காரைகால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை :
வானம் அடுத்த இரு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.