தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் விடாமல் மழை பெய்தது.



அம்மா உணவகங்களில் இலவச உணவு:


சென்னை மாநகரில் நேற்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னை மழையில் இருந்து தப்பியது. இதையடுத்து, ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.


ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. படகுகள், நிவாரண மையங்கள், பேரிடர் மீட்புக்குழுக்கள் என்று தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கான மக்கள் பயன்:


சென்னையில் நேற்று அம்மா உணவங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் சென்னையில் அம்மா உணவகங்களில் உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறப்பித்த உத்தரவில் இரண்டு நாட்களுக்கு அம்மா உணவகங்களில் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதால் சென்னை முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற உள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் நேற்றே அறிவித்தனர். மழைநீர் தேங்கியுள்ள 41 இடங்களில் இன்றே மழைநீர் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி கரையை கடந்ததாலும், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் இந்த மழையால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. சென்னையில் அதிகபட்சமாக மணலி புதுநகரில் 22 செ.மீட்டர் மழை பதிவாகியது.


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கரையை கடந்தது. ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்றதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டது.


இதனால் நேற்றே சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. இன்று காலை முதல் சென்னை மீண்டும் பரபரப்பாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.