வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக பிரதான சாலைகள், உட்புற சாலைகள் என அனைத்து சாலைகளும் மழைநீரால் மூழ்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், தூய்மை பணியாளர்களும் மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தேங்கிய மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.




தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ், தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் வெ.இறையன்புவின் சொந்த சகோதரர். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தேசிய பேரிடர் மேலாண்மையில் இந்தியாவிலே பட்டம் பெற்றவர். இவர் 1991ம் ஆண்டு குஜராத் மாநில கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார்.



இந்தியாவின் மிகப்பெரிய பேரழிவான 2001ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் பூகம்பத்தின்போது, குஜராத் பூகம்ப மீட்பு பணிகளை மிகவும் துரிதமாக நடத்திக்காட்டியவர். அப்போது, குஜராத் மாநிலத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி பதவி வகித்தார். மோடியின் செயலாளராக பொறுப்பு வகித்த திருப்புகழ் மிகவும் பொறுப்புடனும், துரிதமாகவும் நிலநடுக்க மீட்புபணியில் ஈடுபட்டார். இவரது துரித நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோர் உடனடியாக மீட்கப்பட்டனர். திருப்புகழின் சிறப்பான செயல்பட்டால் மிகவும் ஈர்க்கப்பட்ட மோடி, அவரது குட் புக்கில் இடம்பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக திருப்புகழ் செயல்பட்டவர். மேலும், குஜராத்தின் முதல்வராக மோடி பொறுப்பு வகித்த காலத்தில் 2005ம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.




குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரிடர் மீட்பு பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர் திருப்புகழ் ஆவார். மேலும், பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் முனைவர் பி.கே.மிஸ்ராவுடன் இணைந்து பல முக்கியமான அரசு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.


குஜராத் நிலநடுக்க மீட்பு பணியின்போது துரிதமாக இவரது சிறந்த செயல்பாடு காரணமாக, அண்டை நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறப்பு ஆலோசகராக அந்தநாட்டுக்கு திருப்புகழ் அழைக்கப்பட்டார்.  இதுமட்டுமின்றி, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசிலும், மாநில அரசிலும் பேரிடர் மேலாண்மையில் மிகுந்த அனுபவம் கொண்ட திருப்புகழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண