செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை பாஜகவினர் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


”ஊடகவியலாளர்கள் இன்று (13-10-2022) வியாழன் காலை , தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது பாஜக அலுவலகத்திற்கு வெளியில் சாலையோரம் பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.


மிரட்டல் விடுத்த பாஜகவினர்


இது தொடர்பாக காட்சிகளை எடுத்த ஊடக ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை அங்கிருந்த பாஜகவினர் சிலர் மோசமான வகையில் மிரட்டியுள்ளனர். ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியுமுள்ளனர்.


அருவருப்பான இந்த மிரட்டல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக தமிழக பாஜக தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.அவரும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.


கட்சி ரீதியாக நடவடிக்கை


செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களை கண்ணியமாக நடத்தப்படுவதை பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை உறுதிபடுத்துவதுடன் இன்றைய அருவருப்பான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


இனி வருங்காலங்களில் இது போன்ற மோசமான சம்பவங்கள் தொடராமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று கருதுகிறோம்.நாகரீக சமுகத்தில் ஊடகவியலாளர்கள் மீது மிரட்டல் விடுப்பதும் ஆபாச வார்த்தைகளால் அச்சுறுத்துவதும்  தரங்கெட்ட செயல் என்பதை  அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம்


தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்


தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு விதமாக மிரட்டல்கள் தாக்குதல்கள் தொடர்கிறது. செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இத்தருணத்தில் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் முன்னதாக நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.


நக்கீரன் நிருபர் மீதாக தாக்குதல்


இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் “நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இத்தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் ,புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.


முதலமைச்சரிடம் வேண்டுகோள்


அண்மைக்காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் போக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பதை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் உணர வேண்டும் .பத்திரிகையாளர்களை தாக்குகின்ற சமூக விரோத கும்பலாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத  கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு தரப்பு செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.