நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது மதுரவாயல் பைபாஸ் திட்டம். சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் சென்னை நகருக்குள் வந்து எண்ணூருக்கு செல்வதில் அதிக சிரமம் ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்வதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டது. நேரம் மாற்றம் காரணமாக வாகனங்கள் பலமணிநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் சரக்குகள் தேக்கமடைய ஆரம்பிக்க, எண்ணூருக்கு வரவேண்டிய சரக்குகள் கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யபயன்படுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய வருவாய் வேறு மாநிலங்களுக்குச் சென்றது. இதனை சரி செய்ய மதுரவாயல் முதல் எண்ணூர் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க 2010ல் கருணாநிதி தலைமையிலான அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் ஆரம்பித்தது.


2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு, கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பது உள்ளிட்ட, பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றது அதிமுக அரசு. இத்திட்டத்திற்காக போடப்பட்ட 110 தூண்கள் போஸ்டர் போர் நடத்துவதற்காக 500 கோடி ரூபாய் செலவில் அரசே அமைத்து கொடுத்த காஸ்ட்லி களமாகவும், காழ்ப்புணர்ச்சியின் அடையாளமாகவும் நின்றது. விளைவு, துறைமுகத்திற்குச் செல்ல சரக்கு வாகனங்கள் 4-5 நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இங்கு வரவேண்டிய சரக்குகள் காட்டுபள்ளி தனியார் துறைமுகம், ஆந்திராவில் உள்ள கிருஷ்ண பட்டினம் துறைமுகங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது. நம் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருவாயும் போனது. துறைமுக விரிவாக்கப்பணிகளையும் கைவிட்டது துறைமுக நிர்வாகம்.




மதுரவாயல் பைபாஸ் திட்டம் தொடங்கப்படாவிட்டால் துறைமுகத்தை இழுத்து மூடவேண்டிய நிலைவரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் பலன் இல்லை. 2016ல் ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், இந்த திட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். பழைய திட்டத்தில் மாற்றம் செய்து தருமாறு தேசிய நெடுஞ்சாலைக்கு கடிதம் எழுதியதில் திட்டம் மாற்றம் செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடும் ரூ.3100 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், மீண்டும் அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் 4 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலையாகவும், ஓரடுக்கிற்கு பதிலாக ஈரடுக்கு மேம்பாலமாகவும் கட்டப்படும் என்று நிதின்கட்கரி கடந்த ஆண்டு அறிவித்தார். திட்ட மதிப்பும் ரூ.3,100 கோடியில் இருந்து ரூ.5000 கோடியாக உயர்த்தப்பட்டது. "சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவோம் என அறிவித்திருப்பது, அதன் கட்டுமானத்தைக் குலைத்து, அபரிமிதமான காலதாமதத்தை ஏற்படுத்தும், போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்" என்று தன் கண்டனத்தை பதிவு செய்திருந்தார் ஸ்டாலின். அதன்பிறகு திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிற திமுக அரசு அதன் கனவுத் திட்டமான மதுரவாயல்-துறைமுகம் திட்டத்தை மீண்டும் தூசு தட்டியுள்ளது.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த பரிந்துரைக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது மாநில நெடுஞ்சாலைத் துறை. நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.


நவீன தொழில்நுட்பத்துடன் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.  இந்த மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்தின் அனுமதி மற்றும்  சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் சாலையின் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதில் அணுகு சாலை அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் அடுக்கில் 4 வழிச்சாலையானது மதுரவாயல் முதல் துறைமுகம் வரை செல்லும். இந்த வழித்தடத்தில் கண்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லும். கூடுதல் எடையை தாங்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில்  இப்பாலம் கட்டப்பட உள்ளது.


முந்தைய திட்டத்தில் 3 எண்ட்ரி 3 எக்ஸிட் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 6 எண்ட்ரி, 6 எக்ஸிட்கள் அமைய உள்ளது. இவைகள், சிந்தாதிரிப்பேட்டை, மான்டித் சாலை, பின்னி சாலை, ஸ்பர்டாங்க் சாலை, அமைந்தகரை காவல் நிலையம், காமராஜ் சாலை, சிவானந்த சாலை, கல்லூரி சாலை மற்றும் அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.




ஆசியாவிலேயே முதல்முறையாக நெல்லையில் 1969ம் ஆண்டு ஈரடுக்கு மேம்பாலம் கலைஞர் தலைமையிலான திமுக அரசால் கட்டப்பட்டது. அதன்பிறகு 2014ல் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படுகிறது. மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், சரக்கு போக்குவரத்திற்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட நீண்ட இரட்டை அடுக்கு மேம்பாலமாக இது இருக்கும். தற்போது சரக்குவாகனங்கள் துறைமுகத்தை அடைய 3 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த பாலம் முடிக்கப்பட்டால் துறைமுகத்தை 30 நிமிடங்களில் அடையமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.