பாமக நகர செயலாளர் கொலை குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது, காவல்துறையை தாக்கிய அஜய் என்ற நபரை  சுட்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மர்ம நபர்களால் வெட்டி படுகொடுலை 

 

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரில்,  மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர்  பாமக வடக்கு நகர செயலாளர்  நாகராஜ். இவர் நேற்று இரவு 11:30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



 

தீவிர தேடுதல் வேட்டை

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக இச்சம்பவம் குறித்து 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின் போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வேபாதை அருகே சந்தேக நபர் செல்வதாக, அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு,  சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல் துறை துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர்.

 

 

பாதுகாப்பு பணி

 

இதனால்  நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், பலத்த காயமில்லை என காவல்துறை அறிந்து, அவரை உள் நோயாளியாக அனுமதித்து காவல்துறையின் பலத்த காவல் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன் சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



 

தப்பி ஓடிய குற்றவாளி

 

மற்றொரு குற்றவாளி செங்கல்பட்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தினை வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ். பி. உள்ளிட்டோர், கொலை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு , அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளி காவல்துறை சுட்டு பிடித்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 



செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடரும் கொலைகள்

 

 

கடந்த மாதம் வன்னியர் சங்க, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் காளி என்கிற காளிதாஸ் பட்ட பகலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும், உண்மை குற்றவாளிகள், இதுவரை கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டின் முன் வைத்து வருகின்றனர். அதேபோன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்ற வாசலிலே  வைத்து லோகேஷ் என்பவர் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பாமக நகர செயலாளர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.