சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக கஞ்சா கேக் விற்பனை செய்து வந்த டாட்டூ கலைஞர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 


சென்னை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் சிலர் ரகசியமாக‘கஞ்சா கேக்' விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 16ம்தேதி  சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.


அப்போது, உணவகம் முன்பு 2 பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் வாலிபர்கள் சிலர் பணத்தை கொடுத்து விட்டு கேக் வாங்கி சென்றனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அதிரடியாக 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கேக் மற்றும் கஞ்சா, போதை ஸ்டாம்பு இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். உடனே காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


அதில், மேற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 28 வயதான விஜயரோசன் டாக்கா, 27 வயதான தாமஸ் என தெரியவந்தது. இருவரும் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் உணவகம் ஒன்று நடத்தி வருகின்றனர். இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய்யை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால், இவர்களால் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் விஜயரோசன் டாக்கா, கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் மற்றும் சில மூலப்பொருட்கள் கலந்து 'கேக்' தயாரித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கேக் ரூ. 150 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.


கஞ்சாவில் கேக் தயாரித்து விற்பனை செய்து வந்ததால் காவல்துறையினரிடம் வெகு நாட்களாக சிக்காமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு இல்லாமல் தாமஸ் தனியாக 'டாட்டூ கடை நடத்தி வருகிறார் இவர் தனது கடைக்கு வரும் வடிக்கையாளர்களுக்கு போதை ஸ்டாம் புகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 


காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், அவர்களிடம் இருந்து தப்பிக்க இருவரும் தங்களது நிரந்தர வாடிக்கையாளர்களை ஒன்று இணைத்து தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் கஞ்சா கேக் மற்றும் போதை ஸ்டாம்பு விற்பனை செய்து பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். 


அதை தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா கேக் மற்றும் போதை ஸ்டாம்பு விற்பனை செய்து வந்த டாட்டூ கலைஞர் தாமஸ் மற்றும் விஜயரோசன் டாக்காவை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா, 2 செல்போன்மற்றும் கஞ்சா கேக் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.