பெண் தோள்பட்டையில் மீது கை வைத்த இளைஞர் !! டீ குடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் வசித்து வரும் 31 வயது பெண் தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் GNT சாலையில் உள்ள டீ கடையில் டீ குடிக்க சென்ற போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெண்ணின் தோள்பட்டையில் கை வைத்துள்ளார்.
உடனே அப்பெண் நீங்கள் யார் என்று கேட்ட போது , அந்த நபர் ஆபாச சைகை செய்து அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பொன்னியம்மன்மேடு கோயில் தெருவை சேர்ந்த மோசஸ் (எ) அப்பு ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் மோசஸ் (எ) அப்பு மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி மோசஸ் (எ) அப்பு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கத்தியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேர் கைது. பெண்களை குறி வைத்து பணப் பறிப்பில் ஈடுபட்டது அம்பலம்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் பெண்களை குறி வைத்து சிலர் தொடர்ந்து பணப் பறிப்பில் ஈடுபடுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி பில்லர் அருகே சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர்களிடம் மூன்று கத்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் ( வயது 20 ) வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 24 ) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் ( வயது 24 ) என்பது தெரிய வந்தது.
இவர்கள் மூன்று பேரும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை வேளையில் அப்பகுதியில் உள்ள பெண்களை கத்தியை காட்டி மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் மேலும் கைது செய்யப்பட்ட அப்பாஸ் மொய்தீன் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அவர் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் அறிந்து அப்பாஸ் மொய்தீன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் சென்று அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அப்பாஸ் மொய்தீன்,சஞ்சய்,சரவணன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.