Sembarambakkam Lake: சென்னையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது, 200-லிருந்து ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு:


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணிக்கு அது 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்ததால்  உபரி நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.35  அடியை தாண்டியுள்ளது. ஏரிக்கு நேற்று 452 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 514 கன அடியாக உயர்ந்துள்ளது. கனமழை எச்சரிக்கை தொடர்வதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகப்படியான நீர்வரத்தை சமாளிப்பதற்கு ஏற்ப, ஏரியிலிருந்து முன்கூட்டியே உபரிநீர் திறக்கப்படுகிறது. 


கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: 


ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீரோடையில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்ஃபி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நீர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.