சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பள்ளி மாணவி உதயகுமாரி (15) அப்பகுதிக்கு அருகில் உள்ள சித்தலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். உதயகுமாரிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் புத்தாடை அணிந்து வீட்டில் எளிமையாக கொண்டாட திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தாய், தந்தை இருவரும் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற நிலையில் உதயகுமாரி பள்ளிக்கு செல்லாமல் தனது இரு தம்பிகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார்.
குறிப்பாக தன்னுடைய பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணன் சந்திரன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அண்ணன் சந்திரன் வராத விரக்தியில் மன உளைச்சலில் இருந்த உதயகுமாரி வீட்டின் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த வீட்டில் இருந்த சிறுவர்கள் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்த உதயகுமாரியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் இருந்த செவிலியர் உதயகுமாரியை பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறினர். பின்னர் இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலிஸார் உதயகுமாரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பெரும்பாக்கம் போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அண்ணன் சந்திரன் உதயகுமாரியின் பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையில் இருந்து பெரும்பாக்கம் வீட்டிற்கு வராததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)