கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாடுகள் கொண்டு வர தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி - மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், மே 25ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றும், தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில்  பணிக்கு சென்று வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலானதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடியது. வெளியூர் செல்லும் பேருந்துகள்  நள்ளிரவுடன் நிறுத்தப்பட்டன. கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு என சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெரிய தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் கோலாகலமாக இயங்கி வருகின்றன. 




சென்னை புறநகர் பகுதிகளான ஒரக்கடம், திருவெரும்புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வாகன தொழிற்சாலைகள் பெருமளவில் இருப்பதால் சென்னை புறநகரில் இருந்தும், சென்னையில் இருந்தும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலைக்கு சென்று வருகின்றன. இப்போது முழு ஊரடங்கு என்றாலும் அத்தியாவசிய தயாரிப்புகள் என்ற பிரிவின் கீழ் கார் தொழிற்சாலைகள் வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் வராமல் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பெரிய தொழிற்சாலை இயங்குவதால் அதனைச் சுற்றி பல சின்ன சின்ன நிறுவனங்களும் இயங்குகின்றன. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் வழக்கம்போலவே இயங்கி வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தாலும் விதிமுறைகள் எல்லாம் காற்றில்தான் பரப்பதாக அங்குள்ள ஊழியர்களே குற்றம் சாட்டுகின்றனர்.


இது குறித்து தெரிவித்த சென்னை புறநகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், ''கொரோனா விதிமுறைகள் இங்கு காற்றில் பறக்கின்றன. ஊரே கொரோனா அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருக்கும் நேரத்தில் நாங்கள் தொடர்ந்து நிறுவனத்திற்கு வர நிர்பந்திக்கப்படுகிறோம். நிறுவனமே பேருந்து வசதி கொடுப்பதால் சாலைகளில் சிக்கலில்லை. ஆனால் நிறுவனத்துக்குள் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. அதே நெருக்கடியுடன் தான் வேலை பார்க்கிறோம். ஊழியர்கள் வீட்டில் யாருக்கேனும் கொரோனா என்றாலும் சம்பள பிடித்தத்துடன் மட்டுமே விடுமுறை கொடுக்கின்றன. இல்லையென்றால் வேலைக்கு வரும்படி கூறுகின்றன. சம்பளம் பிடிக்கப்படும் என பயந்து பல ஊழியர்கள் வீட்டில் கொரோனா நோயாளியுடன் தங்கினாலும், பேருந்து ஏறி வேலைக்கு வருகின்றனர். இது எவ்வளவு பெரிய சிக்கலை உண்டாக்கும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை.




கொரோனா முன்னெச்சரிக்கையாக விடுமுறை கேட்டாலும் வேலையை விட்டு நீக்குகின்றனர். தினமும் பல ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. இன்னும் கொடுமை என்றால், சில ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழக்கவும் செய்துள்ளனர். இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறோம். தமிழகத்தை விட்டு கொரோனாவை விரட்ட வேண்டுமென்றால் அரசு முழு ஊரடங்கை முறையாக கவனிக்க வேண்டும். சிறு குறு நிறுவனங்களை அடைத்தால் மட்டுமே அது ஊரடங்கு அல்ல. பெரிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் குடும்பம் உண்டு. '' என்றார்.




பெரிய பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை வற்புறுத்தலின் படி வேலைக்கு அழைப்பதாகவும், ஊரடங்கு மாயை மட்டுமே தமிழகத்தை காப்பாற்றாது என்பதும் அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்தாக உள்ளது.  கப்பலில் கண்ணுக்கு தெரிந்த ஓட்டைகளை அடைத்துவிட்டு சிறு சிறு ஓட்டைகளை அரசு கண்டுகொள்ளாமல் விடுகிறது. ஆனால் சிறு ஓட்டைகளும் கப்பலை மூழ்கடிக்கும் என அரசு உணர வேண்டும் என புலம்புகின்றனர் ஊழியர்கள்.