சென்னையில் பல்வேறு இடங்களில் காகங்கள் இறந்த நிலையில், அவற்றை ஆய்வு செய்ததில் வைரஸ் பாதிக்கப்பட்டு அவை இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னை முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் உஷார்ப்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

Continues below advertisement

எஸ்.டி.பி.ஐ அறிக்கை

அதில், சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், ஈசிஆர், ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் காகங்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், H5N1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் கொண்ட தீவிரமான வைரஸ் என ஆய்வக முடிவுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழலில், தமிழக அரசும் சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, பறவைகள் உயிரிழந்த பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களை உடனடியாக 'கட்டுப்பாட்டு மண்டலங்களாக' (Control Zones) அறிவித்து, அங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Continues below advertisement

மருத்துவ முகாம்களை உடனடியாக அமைத்து, கட்டுப்பாட்டு பகுதியாக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ சுகாதாரத் துறையின் நேரடிப் பார்வையில் விரிவான சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுப்பதோடு, அப்பகுதிகளில் தற்காலிக நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்தும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இந்தியாவில் தற்போது வரை மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், உலகளாவிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பெரும் பாதிப்பைத் தவிர்க்க முடியும் என வலியுறுத்துகிறேன்.

விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அவர்கள் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீதிகளிலோ, வீட்டு மாடிகளிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ இறந்து கிடக்கும் காகங்கள், இதர பறவைகள் அல்லது செல்லப்பிராணிகளை வெறும் கைகளால் தொடக் கூடாது. பறவைகளின் எச்சங்கள்  மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இறந்த பறவைகளைக் கண்டால் தாங்களாகவே அப்புறப்படுத்தவோ ஆய்வு செய்யவோ முற்படாமல், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், கால்நடைத் துறை அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.