சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சற்றுநேரத்தில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், ஆலந்தூர், அசோக் நகர், எழும்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சூறைகாற்றுடன் மழை பெய்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் 3 மணிநேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிவிப்புகளை பார்க்கலாம்:
19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
17.06.2023 மற்றும் 18.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), புலிப்பட்டி (மதுரை) தலா 2, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.06.2023 மற்றும் 18.06.2023: வடதமிழக கடலோரப்பகுதிகள், தென் ஆந்திர கடலோரப்`பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
17.06.2023 முதல் 21.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.