முதலமைச்சர் ஸ்டாலின், தன் கனவு திட்டமான ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தை சென்ற ஆண்டு தான் முதலமைச்சராக பொறுப்பேற்று நடைபெற்ற முதல் கூட்டத் தொடரிலேயே அறிவித்தார்.


துரிதகதியில் மேற்கொள்ளப்படும் பணிகள்


முதற்கட்டமாக இத்திட்டத்துக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சென்னை மாநகரின் சுவர்களில் வண்ணம் தீட்டுதல், பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை அழகுபடுத்துதல், பாலங்களின் கீழ்ப்பகுதிகளை அலங்கரித்தல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல், சுத்தமாகப் பேணுதல், செயற்கை நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சாலை பெயர் பலகைகள் மாற்றம்


மேலும் இத்திட்டத்தின்படி, சாலைகளின் பெயர் பலகைகள் அனைத்தும் சிங்காரச் சென்னை 2.0 திட்ட லச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெயர் பலகையில் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. சுமார் 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.


நீக்கப்படும் சாதிப் பெயர்கள்


இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கம் செய்யும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.




இதன்படி 171ஆவது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது. 13ஆவது மண்டலம், 171ஆவது வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி இரண்டாவது தெரு என்று பெயர் இருந்தது. இந்தப் பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்தப் பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்தச் சாலைகளின் பெயர் அப்பாவு (கி) தெரு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பல்வேறு திட்டங்கள்


சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண