சென்னை (Chennai News): சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாடுகள் அட்டகாசத்தால், உயிர் இழப்பவர்கள், படுகாயம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளின் அதிகாரிகள், மாடுகள் அட்டகாசத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காமல், மென்மையான போக்கை கடைபிடிப்பதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். 

 

சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் சந்திரசேகர் (61). இவர் நேற்று மாலை 4:30 மணி அளவில் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டே இருந்தார். அப்போது இரண்டு எருமை மாடுகள், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு வந்து, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரசேகர் என்பவரை, கொம்புகளால் முட்டி தள்ளின.





 

மாடுகள் வயிற்றில் முட்டியதால், பலத்த காயமடைந்து அதே இடத்தில் விழுந்து கிடந்தார். இதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து, சந்திரசேகரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக  வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலர், அவர்களாகவே ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, சந்திரசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

 

இதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் மாடுகள் அட்டகாசம் காரணமாக, சிலர் உயிரிழந்து வருகின்றனர். சிலர் காயம் அடைந்து வருகின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சி, இதேப் போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது, பரபரப்பாக நடவடிக்கை எடுப்பது போல் செயல்படுகின்றனர். அதன்பின்பு மவுனமாகி விடுகின்றனர். இந்த சோகம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. மாடுகள் அட்டகாசத்தால், அப்பாவி மக்கள் உயிர் இழக்கின்றனர். படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையில் பெருமளவு செலவு செய்து, உயிர் பிழைக்கின்றனர்.

 

அருகே உள்ள தாம்பரம் மாநகராட்சியிலும், இந்த மாடுகள் அட்டகாசம் தொடர்கிறது. கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி, தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில், கணவன் மனைவி நடந்து சென்றவர்களை, மாடுகள் விரட்டி முட்டியதில், 80 வயசு முதியவர், படுகாயம் அடைந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சுமார் ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார். இந்தநிலையில் நங்கநல்லூரில் நேற்று உயிரிழந்த சந்திரசேகர் உடலை, பழவந்தாங்கல் போலீசார், கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

இந்தநிலையில் இன்று மாநகராட்சி  செயலாளர் ராதாகிருஷ்ணன்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து அவர் கூறுகையில், “தொடர்ந்து  மாடுகளை  சாலைகளில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாட்டின் உரிமையாளர்கள்   மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து பராமரிக்காததால் தான் அவை தெருவுக்கு வருகின்றது. உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை  சார்பில் தேடி வருகின்றனர்.  எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை காரணமாக ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்தது தற்போது மீண்டும் இச்சம்பவம் நடந்தேறி உள்ளது” என தெரிவித்தார்