சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தின் முன் தங்கள் பணிகளை நிரந்தரமாக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 


தங்கள் பணிகளை ஒப்பந்த முறையில் அளிக்க முடிவுசெய்த சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் முடிவுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வரும் இந்தத் தூய்மை பணியாளர்கள் சாலையின் ஓரங்களில் உறங்குவதாகவும், வாரியத்தின் முடிவின் காரணமாக சுமார் 1800 பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


கடந்த 5 நாள்களாக உறங்கவில்லை எனவும், தங்கள் வீடுகளுக்கும் திரும்பவில்லை எனவும் கூறும் துப்புரவுப் பணியாளர்கள் தினமும் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே உணவு உண்டு வருவதாகவும், தங்களைக் காவல்துறையினர் பலவந்தமாக நீக்குவார்கள் என அச்சப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 



எந்த தொழிற்சங்கத்தின் பின்னணியோ, அரசியல் கட்சிகளின் ஆதரவோ இல்லாமல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வௌர்வதாக கூறுகின்றனர் போராடும் துப்புரவுப் பணியாளர்கள். இந்தப் போராட்டக் களத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அவ்வபோது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளில் இருந்து நீங்கி இருக்க இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 


கடந்த 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்காக ஜெட் ராடிங் வாகனங்களின் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஒருவர் அதிகாரிகளின் போலியான வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் கூறியுள்ளார். `இங்கு இதுவரை 6 நிர்வாக இயக்குநர்கள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டுள்ளேன். 3 மாதங்களில் பணி நிரந்தரம் வழங்குவதாகக் கூறி, எங்களைத் தற்காலிக பணியாளர்களாக பணி தொடர வைப்பார்கள். அந்தக் காலம் கடந்தவுடன் அவர் இடம் மாற்றப்பட்டு, புதிய நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுவார். அவரிடம் நாங்கள் மீண்டும் முதலில் இருந்து முறையிடுவோம்.. கடந்த பல ஆண்டுகளாக இங்கே இப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார். 



மேலும் பேசியுள்ள அவர், `நாங்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக இல்லாத போதும், வாரியம் சார்பாக எங்கள் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததால் மௌனமாக இருந்தோம். எனினும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நாங்கள் ஒப்பந்ததாரர்களின் கீழ் பணியாற்றுமாறு உத்தரவு வழங்கப்பட்டது. எங்கள் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. எனக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தற்போது 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் இருந்து பி.எஃப், ஈ.எஸ்.ஐ முதலான பிடித்தங்களுக்காக பணம் எடுக்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும், அதற்காக நாங்கள் எந்த ஆவணங்களையும் இதுவரை அளிக்கவில்லை. எங்கள் கணக்குகளுக்கு இந்தப் பணம் செல்வது எப்படி எங்களுக்குத் தெரியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கடந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் மக்களுக்காக முன்களப் பணியாளர்களாக தொடர்ந்து வேலை பார்த்ததாகக் கூறுகின்றனர். `எங்களை மீண்டும் பணிகளுக்குத் திரும்புமாறு கூறுகின்றனர். நாங்கள் வேலை செய்யவில்லை என்றால், எங்களை பணியில் இருந்து நீக்குவோம் எனவும் கூறுகின்றனர். நாங்கள் மொத்தமாக 1800 பணியாளர்கள் இருந்தாலும், அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக வெகுசிலரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களின் குடும்ப சூழல் காரணமாக பலரும் அதிகாரிகளை எதிர்த்து போராட முன்வரவில்லை’ எனவும் போராடும் பணியாளர்கள் கூறுகின்றனர்.


நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்