சென்னையில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

மெட்ரோ பணியில் கலக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘மயில்‘

அந்த அறிக்கையில், "‘மயில்‘ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் UG-01 மற்றும் UG-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Continues below advertisement

வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரையிலான (downline) 1898 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 12.12.2025 தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் “மயில்”, முதலில் வழித்தடம்-4-ல் மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை 23.07.2025 அன்று வந்தடைந்தது. அந்த துளையிடும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அது பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், கோடம்பாக்கம் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பனகல் பூங்கா நிலையத்தில் மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் இது, போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது. இந்தப் பிரிவில் இரட்டை சுரங்கப்பாதைகளில் ஒரு சுரங்கப்பாதையை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இதுவாகும். இந்தச் சுரங்கப்பணியில் குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்கள் அடங்கும். குறிப்பாக, நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் முதல் கட்ட மெட்ரோ சுரங்கப்பாதைகளுக்கு அடியில் சுரங்கம் தோண்ட வேண்டியுள்ளது. இந்த சுரங்கப் பாதை, தரை மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30.2 மீட்டர் (100 அடி) ஆழம் வரை செல்கிறது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் வழித்தடம்-4-ல் (Down Line) பனகல் பூங்காவிலிருந்து நந்தனத்தை நோக்கி நகர்ந்து, இறுதியாக போட் கிளப் நிலையத்தை வந்தடையும். இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணியானது நவம்பர் 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது“ என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.