சென்னை மெட்ரோ ரயிலில் பயணத்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகளாக அதிகரித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் 72,68,007 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் சேவை:


 சென்னையில் பயணத்திற்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்படுள்ளது. 


சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து மே மாதம் அதிக பயணிகள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாகாவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மெட்ரோ ரயில் சேவை - பயணிகள் எண்ணிக்கை விவரம்:


 இந்தாண்டு  ஜனவரி மாதத்தில் 66,17,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயனிகளும் மற்றும் மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


மே மாதத்தில் மட்டும் க்யூ.ஆர். குறியீடு (QR Code:) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,546 பயணிகள், பயண அட்டைகளை (Travel Cand Ticketing System) பயன்படுத்தி 42,18,357 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,61,748 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,138 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


மெட்ரோ டிக்கெட் சலுகை:


சென்னை மெட்ரோ இரயில் பயணிக்க கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மொபைலில் க்யூ.ஆர். கோட் மூலம் (Mobile QR Code (Single, Return, Group Ticket and Q.R. Trip Passes)) டிக்கெட் எடுப்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.


மெட்ரோ டிராவல் அட்டைகள் (Metro Travel Cards) மூலம் பயணம் செய்பவர்களுக்கும் பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. 


மெட்ரோ டிராவல் கார்டு:


மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகப்பட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.


சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு மெட்ரோவில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  


சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம்:


மெட்ரோ இரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண  நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.