Chennai Metro Rail: அனைத்து வகை டிக்கெட்டுகளிலும் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


ஸ்தம்பித்த சென்னை:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது.  


தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது. 


மழைநீர் சூந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுமுனையில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு சென்னை திரும்பி வருகிறது. பேருந்து சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், புறநகர் ரயில்களில் தண்டாவளங்களில்  தண்ணீர் தேங்கி இருப்பதால் பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து  ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


அனைத்து டிக்கெட்டுகள் மூலமும் பயணிக்கலாம்:


இதற்கிடையில், மெட்ரோ சேவைகள் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் புதிய சிக்கல் ஏற்பட்டது.  அதாவது, தெலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு என்று தனியாக பிளாஸ்டிக் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.  இந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, க்யூ ஆர் கோர்டு மற்றும் சிங்கார சென்னை அட்டை மூலமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.  






செல்போன் நெட்வோர்க் பிரச்னையால் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவித்து வந்த நிலையில், தற்போது அது சரி செய்யப்பட்டாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வாட்ஸ் அப், பேடிஎம், போன்பே என அனைத்து வகை டிக்கெட்டுகள் மூலம் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.