Chennai Metro Rail: ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்திற்கு, மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்:


ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில், மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேளிக்கை விடுதிக்கு அருகே நடைபெறும் மெட்ரோ பணிகளே காரணமாகவே, கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,ஆழ்வார்பேட்ட செக்மெட் கேளிக்கை விடுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், அப்பகுதியில் நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் விரும்புகிறது. காரணம் அந்த கேளிக்கை விடுதியில் இருந்து 240 அடி தொலைவில் நடைபெறும் மெட்ரோ பணிகளால் அந்த கட்டிடத்தில் அதிர்வுகள் அல்லது விரிசல்கள் எதுவும் ஏற்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


 






கேளிக்கை விடுதியில் விபத்து:


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் எனப்படும் கேளிக்கை விடுதியின் மேற்கூரை நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த உடன் விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு விரைந்தது. ஜேசிபியை கொண்டு இடிபாடுகளை அகற்றி, மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 45 வயதான சைக்ளோன்ராஜ், மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (23), லாலி (22) ஆகியோரும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  கேளிக்கை விடுதியின் ஒருபகுதியில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படதால், பெரும் உயிரிசேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்து நடந்த கேளிக்கை விடுதிக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதோடு தலைமறைவாகியுள்ள கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடி வருகிறது.