Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணியின் ஒரு பகுதியாக 3ஆம் வழித்தடத்தில் கல்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-இல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement


சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - Chennai Metro Rail Phase 2


சென்னை நகரின் தற்போதைய மெட்ரோ போக்குவரத்தை விரிவுப்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணைப்பை மேம்படுத்துவதையும் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


தோராயமாக, 118.9 கிலோமீட்டர் பரப்பளவில், இது மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது: மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் (Light House) முதல் பூந்தமல்லி வரை, மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை.


பெரம்பூர் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு:


இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு, தமிழ் நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.


வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் TU-01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.


சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் (S-1331) வழித்தடம் 3இல் (up line) அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று (13.05.2025) பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.


எப்போது முடியும் பணிகள்? 


அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் S 1331 பெரம்பூர் ரயில்வே நிலையத்தின் பாதைகள் / நிலையங்களை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்றபெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.


இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடாப் ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


வரும் 2027ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில ரயில் பாதைகள் முன்னதாகவே திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை இந்தாண்டு (2025ஆம் ஆண்டு) டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது.