Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் (Paytm) செயலியில் டிக்கெட்டை பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. 





டிக்கெட் பெறும் வசதி: 


ஏற்கனவே பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இதில் அடுத்த கட்டமாக புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, சென்னை பேடிஎம் செயலியில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பேடிஎம் செயலியில் சென்னை மெட்ரோ என சர்ச் செய்து அதிலேயே டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ஸ்டேஷனில் இந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பயணம் செய்ய முடியும்.  இந்த வசதி பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த சேவைகள் தற்போது 20% கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.


எப்படி டிக்கெட் பெறுவது?


மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் செயலியில் மெட்ரோ பிரிவின் கீழ் நுழையும் நிலையம் மற்றும் சேரும் இடத்தை குறிப்பிட்டு பயணச்சீட்டை வாங்க முடியும். Paytm Wallet, Paytm UPI, paytm UPI Lite, Paytm Postpaid, Net Banking, Cards போன்ற கட்டண விருப்பங்களை பேடிஎம் ஆப்பில் தேர்வு செய்து கொள்ளலாம். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்களில் க்யூர்ஆர் கோர்டு ஸ்கேனரின் முன் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்.


மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பேடிஎம் மூலம் டிக்கெட் பெறும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.