ரூ.1,538.35 கோடியில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க Alstom Transport India, என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 32 மெட்ரோ ரயில்களில் முதல் மெட்ரோ ரயில் 2027 பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடுமையான ரயில் பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை மெட்ரோ நிர்வாகம்
சென்னை மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு கட்டமாக மெட்ரோ சேவையை, அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், 3 வழிதடங்களில், 119 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மூன்றாம் கட்டப் மற்றும் நான்காம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளும் துவங்கப்பட உள்ளன.
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் - Chennai Driverless Metro Train
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ஆம் வழித்தடம் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டருக்கு அமைய உள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அதிகம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்து
32 மூன்று பெட்டி டிரைவர் இல்லாத (UTO) ரயில்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மெசர்ஸ் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
32 UTO ரயில்களை உருவாக்குவதற்கான தரமான கேஜ் மெட்ரோ ரோலிங் ஸ்டாக் (எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட்கள்) வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், வழங்குதல், சோதனை செய்தல், ஆணையிடுதல், பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பதினைந்து (15) ஆண்டுகளுக்கான விரிவான பராமரிப்பு ஒப்பந்தம்" ஆகியவற்றை உள்ளடக்கியது. ரயில்கள் செப்டம்பர் 2027 மற்றும் மே 2028-க்கு இடையில் வழங்கப்பட்டு CMRL தளத்தில் சோதிக்கப்படும்.