Chennai Metro Rail: கோயம்பேடு முதல் ஆவடி வரை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்:
இந்நிலையில், சென்னை மெட்ரோ திட்டம் 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக் கூறு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோயம்பேடு-ஆவடி, சிறுசேரி-கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 வழித்தடம் 5ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ரூ.6376.18 கோடி மதிப்பில் மெட்ரோ ரயிலை நீட்டிபதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வழித்தடம் 3ல் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23.5 கி.மீ நீளத்திற்கு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ரூ.5458.06 கோடி மதிப்பீட்டில் சாத்தியக் கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்டத் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், கணிசமான தொழில்துறை மற்றும் குடியிருப்பு மேம்பாடுகளைக் கொண்ட திருப்போரூர், மகாபலிபுரம் வழியாக கேளம்பாக்கத்தின் தெற்கு விரிவாக்கத்தில் மேலும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்று சாத்தியக் கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.