மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வட சென்னையில் இருந்து தேர்வாகும் முதல் பெண் மேயர் மற்றும் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்ற பெருமை பிரியா ராஜனையே சேரும். பிரியாராஜன் சென்னை பல்கலை கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றவர். தான் மேயராக பதவியேற்ற பிறகு , சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தனது குடும்பம் குறித்தும் , மேயர் பதவி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.







அதில் அவர் கூறியதாவது : “தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இருந்த இடம் இது.  அதை நினைக்கும் பொழுது நான் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என தோன்றுகிறது. தலைவர் லெவலுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்றாலும் கூட, அவர் வழியை பின்பற்றி என்னால் முடிந்த அளவுக்கு  சிறப்பாக நிரூபிக்க முயற்சி செய்வேன். நான் பலமுறை முதல்வரை சந்தித்து இருக்கிறேன். எனது திருமணத்திற்கெல்லாம்  தலைவர் வந்திருக்கிறார். குடும்ப விழாக்கள், கட்சி தொடர்பான சந்திப்புகளில் பார்த்து, புகைப்படம் எடுத்தது உண்டு. அவரை மேயராக அறிவாலயத்திற்குள் சந்திக்கும் பொழுது , புன்னகையுடன் வரவேற்று, மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்தார்.  


பிரியா ராஜன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் இருப்பது தனக்கு பெருமையான விஷயம் என்றும் , சென்னையை மேம்படுத்த தன்னிடம் நிறைய திட்டங்கள் இருக்கிறது. தலைவரிடம் ஆலோசனை பெற்று அதனை செயல்படுத்துவேன் என்கிறார் அவர்.  “என்னை யாரும் சின்ன பொண்ணாக எனது கட்சியில் பாவிக்கவில்லை. எந்த விழாவுக்கு சென்றாலும் மேயர் வருகிறார் என அதற்கான மரியாதை கொடுப்பார்கள். தெரியாத விஷயங்களையும் சொல்லிக்கொடுப்பார்கள் . பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தலைவர் அவர்கள் முன்மாதிரி” என தெரிவித்துள்ளார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்.