Marina Blue Flag Beach Opening Date: நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மெரினா நீலக்கொடி கடற்கரை - எப்போது திறப்பு?
சென்னை மெரினாவில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும் பிப்ரவரி 22ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியானது, சற்றே தாமதம் ஆகியுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் பொறியாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில சிறிய பணிகள் இன்னும் நிலுவையில் இருப்பதால இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாமதத்திற்கான காரணம் என்ன?
வெளியாகியுள்ள தகவலின்படி, ”கடற்கரையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி இன்னும் முழுமையடையவில்லையாம். முதலில் இரண்டு விளையாட்டு பகுதிகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்ததாகவும், மாநாகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த எண்ணிக்கை நான்காக உயர்த்தப்பட்டதாகவும்” இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. மேலும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான, சிலையை நிறுவுவதற்கான பணிகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இதன் விளைவாகவே திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.
ரூ.7 கோடி செலவில் விரிவாக்க பணிகள்
சர்வதேச தரத்திலான நீலக்கொடி கடற்கரை அந்தஸ்தை எட்டுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.7 கோடி செலவில் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே மெரினாவில் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்கட்டத்தில் இருந்ததை காட்டிலும் அகலமான மணற்பரப்பை உள்ளடக்கி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த, விசாலமான கடற்கரை காட்சியை வழங்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாம்.
புதிய வசதிகள் என்ன?
மூங்கில் கட்டைகளால் செய்யப்பட்ட 60 இருக்கைகள், 30 நிழற்குடைகள் உடன், 4 கண்காணிப்பு கோபுரங்கள், குழந்தைகளுக்கான 4 விளையாட்டு மையங்கள், படிப்பதற்கான 2 மையங்கள் மற்றும் 2 செல்ஃபி பாயிண்ட்கள் ஆகியவை நிறுவப்படுகின்றன. இதுபோக ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், இங்கு மூங்கில் கட்டைகளால் ஆன குப்பை தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவிலான நீலக்கொடி கடற்கரை..
முன்னதாக, சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.7.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் முதற்கட்ட பகுதியை, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் திறந்துவைக்கப்பட்டது. அதில் 20 மூங்கில் நிழற்குடைகள், 40 நாற்காலிகள் மற்றும் அமர்வதற்கான 12 பெஞ்ச்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தியான மையம், மாற்றுதிறனாளிகளுக்கான 12 சக்கர நாற்காலிகள், கடற்கரையை எளிதில் அணுக பிரத்யேக தளத்துடன் கூடிய வழி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சிசிடிவி கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்யப்படுகிறது. முதலுதவி மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிவறைகள் மற்றும் குளியலறை என பல வசதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இங்கே உள்ளே நுழைவதற்கான அனுமதி இலவசமாக இருந்தாலும், சில வசதிகளை அணுக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீலக்கொடி கடற்கரையின் முக்கியத்துவம்..
நீலக் கொடி கடற்கரை என்பதுசுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு, நீர் தரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான உயர் தரங்களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள் மற்றும் நிலையான சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அடையாளமாகும். இந்த சான்றிதழைப் பெற குறிப்பிட்ட பகுதியானது நான்கு முக்கிய பிரிவுகளில் 33 குறிப்பிட்ட விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு. இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டின் கோவளம் கடற்கரையும் அடங்கும். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே மெரினா கடற்கரையை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
