பள்ளியில் படிக்கும் மகளின் தோழியை கடத்திச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து அடைத்து வைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படியும் நடக்குமா என்ற இந்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் அரங்கேறியுள்ளது.


தினம் தினம் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களும் நம் காதில் விழாமல் இல்லை. எத்தனையோ சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும், கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மகளின் தோழியை கடத்திச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து அடைத்து வைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படியும் நடக்குமா என்ற இந்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் அரங்கேறியுள்ளது.




சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். படிப்பு தொடர்பாகவும், தோழி என்ற முறையில் அடிக்கடி சென்றுள்ளார். திடீரென்று மாணவியை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினரிடமும், மற்ற நண்பர்களிடம் தீவிரமாக பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆனால் மாணவி எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவி அடிக்கடி சென்றுவரும் தோழியின் வீட்டுக்குச் சென்று குறுக்குவிசாரணை செய்துள்ளனர். அதில் அந்த தோழியின் தந்தை சுரேஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார் அந்த கொடூர தந்தை. 


தன் வீட்டுக்கு அடிக்கடி வரும் மகளின் தோழியிடம் சோகமாகவும், மனதை கரைக்கும் வார்த்தைகளையும் பேசியுள்ளார் சுரேஷ். தன்னுடைய மனைவிக்கு காசநோய் என்றும், மனைவியின் இடத்தில் நீ இருக்க வேண்டுமென்றும் மாணவியை மூளைச்சலவை செய்துள்ளார்.




அப்படியானால் என் மகளுடன் ஒரே வீட்டில் நாம் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் வசித்த பகுதிக்கு அருகில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி தப்பிவிடக்கூடாது என்பதற்காக வீட்டை பூட்டியே வைத்துள்ளார். இந்நிலையில் மாணவி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 


பெற்ற மகளின் சம வயது பெண்ணையே தந்தை  ஒருவர் கடத்தி வைத்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண