புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையை சிகிச்சைக்காக, சென்னை அழைத்து வந்த இரு மகன்கள், சிகிச்சை முடிந்து, தந்தையை விமானத்தில் வங்கதேசம் அழைத்துச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் அலிம் உட்டின் (65). இவர் சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதை அடுத்து அலிம் உட்டினை மருத்துவ சிகிச்சைக்காக, அவருடைய மகன்கள் முகமது மகியுதீன், முகமது அப்சர்ருதீன் ஆகிய இருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.



 

சென்னையில் இருந்து வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு, கொல்கத்தா வழியாக விமானத்தில் வங்கதேசம் செல்வதற்காக, நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர்.

 

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கொல்கத்தா வழியாக வங்கதேச தலைநகர் டாக்கா செல்வதற்காக, தந்தை மகன்கள் இருவர் ஆகிய மூன்று பேருக்கும் விமான டிக்கெட்டுகள் எடுத்தனர். அதன்பின்பு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்து, விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அலிம் உட்டின் மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து பதறிப் போன மகன்கள் இருவரும், விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன், தந்தையை விமான நிலைய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.



 

அங்கு அலிம் உட்டினை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்று அறிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.இதை அடுத்து விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.புற்று நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை, சிகிச்சைக்காக சென்னைக்கு, விமானத்தில் அழைத்து வந்து, மருத்துவ சிகிச்சை முடிந்து, சொந்த நாடான வங்கதேசம் செல்ல, சென்னை விமான நிலையம் வந்த நிலையில், தந்தை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது, இரு மகன்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.