பாலியல் புகாரில் சிக்கிய சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் உள்ள மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறினார்கள். பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாகின. 


இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் கே.கே.நகர் தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவங்களை போலவே, சில பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவது பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் மீது 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மீது அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் இன்று பாலியல் புகார் கூறியுள்ளனர்.ஏற்கனவே முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் கைதான நிலையில் மேலும் 2 பேர் புகார் கூறியதை தொடர்ந்து, அந்த புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பணியில் அசோக நகர் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இது தொடர்பாக ரகசியமாக தகவல் தெரிவிக்க தமிழக அரசு குழுஒன்றை நியமித்தால் இன்னும் பல குற்றச்சாட்டுகள் வெளிவரலாம். இது போன்ற தவறில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் இது போன்ற குற்றங்கள் குறையும்.